ராம நவமியை முன்னிட்டு குமரிக்கு வரும் கேரள யாத்திரைக்குழு அரசியல் ஆதாயம் தேடக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி யாத்திரைக்குழு செயல்பட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-16 14:43 GMT

சென்னை,

கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை தமிழகத்தின் 11 மாவட்டங்கள் வழியாக யாத்திரை செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை செல்ல அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பிக்கலாம் என்றும், அதை காவல்துறையினர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், திருச்செந்தூர் வழியாக யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி ஜெயச்சந்திரன், திருச்செந்தூர் வழியாக யாத்திரை செல்ல அனுமதிக்க முடியாது என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி யாத்திரைக்குழு செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராமர் படத்துடன் 3 வாகனங்கள், 30 பேர் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாகவும், நாளை பிற்பகல் 2 மணியளவில் யாத்திரையை முடித்து கேரளாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், இந்த நிகழ்வில் எந்த அரசியல் ஆதாயமும் தேடக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்