மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க பெண்ணை கொலை செய்து நகையை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்க தன்னுடன் பணியாற்றிய பெண்ணை கொலை செய்து நகையை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2023-09-14 06:00 GMT

சென்னை சூளைமேடு வீரபாண்டிநகர் முதலாவது தெருவில் வசித்து வந்தவர் அஜீத்குமார் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றிவந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இவரது மனைவி மகாலட்சுமி தனது பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதற்காக தன்னுடன் பணியாற்றிய வேல்விழி என்பவரிடம் அஜீத்குமார் கடனாக பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் இல்லை என கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து அஜீத்குமார், வேல்விழியிடம் அவரது கம்மல், மோதிரத்தை கொடுக்கும்படியும், அதை அடமானமாக வைத்து பணம் பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

அதற்கும் வேல்விழி மறுத்துவிட்டார். அதனால் ஆத்திரமடைந்த அஜீத்குமார், வேல்விழியை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தார்.

பின்னர் வேல்விழியின் உடலை சாக்குப்பையில் வைத்து கோயம்பேடு தீயணைப்பு நிலையம் அருகே வீசிச் சென்றார்.

இதுகுறித்து வேல்விழியின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, அஜீத்குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்