மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு எப்போதும் திட்ட செயலாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-14 08:54 GMT

சென்னை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி கிரிராஜ் சிங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊரகப் பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். மேலும், ஊரக மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பை வழங்குவதுடன், நீடித்த மற்றும் நிலையான ஊரக சொத்துக்களை உருவாக்கி, உள்ளூர் மக்களின் முனைப்பான பங்கேற்புடன் கிராமங்களை மேம்படுத்தும் ஒரே திட்டமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்திட்டம் அனைவரையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 86 விழுக்காடு மகளிர், 29 விழுக்காடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் பல்வேறு அளவீடுகளில் தமிழ்நாடு எப்போதும் திட்ட செயலாக்கத்தில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

இதுவரை, மூன்று தவணைகளில் 37 கோடி மனித சக்தி நாட்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 06.03.2024 வரை தமிழ்நாடு 40.51 கோடி மனித சக்தி நாட்களை எட்டியுள்ளது. இதில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79.28 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில், 06.11.2024 வரை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய ஊதியமான ரூ.8,734.32 கோடி நிலுவையில், ரூ.7,712.03 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் நவம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆகிய ஆண்டுகளுக்கான ஊதியப் பொறுப்பு 05.01.2024 அன்று ரூ.1,022.29 கோடியாக உள்ளது. இது தொடர்பாக தாம் 10.01.2024 அன்று ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியதையடுத்து, மத்திய அரசு 15.01.2024 மற்றும் 30.01.2024 ஆகிய நாட்களில் ரூ.1,388.91 கோடி ஊதியத்தை விடுவித்தமைக்காக தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், நவம்பர் 2023 கடைசி வாரத்திலிருந்து திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததால், அதனுடன் பொறுப்புத் தொகையும் 1,678.83.ع கோடியாக சேர்ந்துள்ளது. இது டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த 24.21 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

எனவே, 05.01.2024 வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் இது தொடர்பாக மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி கிரிராஜ் சிங்கின் தனிப்பட்ட தலையீட்டை தாம் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்