குடும்ப தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை

திருப்பூரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த பூ வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-30 17:19 GMT

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பூ வியாபாரி

திருப்பூர் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ்.நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரது சொந்த ஊர் மதுரை. இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான். மணிகண்டனுக்கு பவித்ரா 2-வது மனைவி ஆவார். அதுபோல் பவித்ராவும் ஏற்கனவே திருமணமானவர். 2-வதாக மணிகண்டனை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பவித்ரா அவரது தாயாருடன் அடிக்கடி பேசி வருவது பிடிக்காமல் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் கணவன்-மனைவி இருவரும் இருந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி கைகளால் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

தலையை துண்டித்து கொலை

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கோபத்தின் உச்சிக்கே சென்ற மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் 3-வது மாடியில் குடியிருந்துள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்றபோது, வீட்டில் இருந்து வெளியே வந்த மணிகண்டன் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா பிணமாக கிடந்தார்.

உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கிருந்த மணிகண்டனை போலீசார் பிடித்தனர். அப்போது பவித்ராவின் துண்டிக்கப்பட்ட தலையை ஒரு பூக்கூடைக்குள் வைத்து வெளியே கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. பவித்ராவின் தலையில் மட்டும் 16 இடங்களில் வெட்டுக்காயம் இருந்துள்ளது. மேலும் உடலிலும் சரமாரியாக வெட்டுக்காயம் காணப்பட்டுள்ளது.

பரபரப்பு

பவித்ராவின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்