சத்தி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சத்தியமங்கலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-25 21:47 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கர்ப்பம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாயிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் தாய் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதனால் சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அவர் சிறுமியிடம் விசாரித்தார். அவர் கூறியதாவது:-

போக்சோவில் வாலிபர் கைது

நான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த சித்தராஜ் (வயது 28) என்பவர் என்னிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் தொடர்ந்து பலமுறை அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சித்தராஜை கைது செய்தனர். பின்னர் சித்தராஜ் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்