ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்..! அழகான பெண் குழந்தை பிறந்தது

ஆதரவற்ற பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலீசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2022-09-17 07:55 GMT

வேலூர்:

வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக வேலை செய்பவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்த போது போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளி கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார்.

பெண் ஒருவர் அழும் சத்தத்தை கேட்ட இளவரசி அவரது அருகில் சென்று பார்த்தார். அப்போது இளம் பெண் ஒருவர் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளம் பெண்ணுடன் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

உடனே போலீஸ் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் இளம் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இளம் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லாண்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து இளம் பெண் கூறியதாவது, திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும், தனது அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தரம் வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து பெண் போலீஸ் இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணிற்கு போலீசார் பிரசவம் பார்க்க சம்பவம் வேலூரில் நெகிழியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்