பிரதமரின் வீடு கட்டும் திட்ட வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளின் வீடுகளை முன்னேற்றத்திற்கு கொண்டு வர வேண்டி கடலூர், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசியதாவது:-
தலையாய கடமை
அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவது ஊராட்சி மன்ற தலைவரின் தலையாய கடமையாகும். ஆகவே ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியில் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்துவதன் மூலம் கிராமங்கள் வளர்ச்சி அடையும்.
பிரதமரின் வீடு கட்டும் (பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் பணி ஆணை பெற்ற பயனாளிகளை வீடு கட்டுமான பணிகளை உடனே தொடங்க அறிவுறுத்த வேண்டும். பல்வேறு நிலைகளில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தொடர்ந்து கண்காணித்து, குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய்கள் அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களின் பங்களிப்பு தொகையை உடனே பெற்று கட்ட வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அவற்றை தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தகுந்த முறையில் அகற்றுவதன் மூலம் கிராமம் சுகாதாரமாக திகழ்வதுடன் நெகிழி இல்லா கிராம மாக உருவாக்க முடியும். இதை ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணித்து செயல்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் மற்றும் தனிநபர் நீர் உறிஞ்சி குழி, சமுதாய நீர் உறிஞ்சி குழி போன்ற கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குனருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.