நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-03-27 00:54 IST

விருதுநகரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், சைதை துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு மாபா பாண்டியராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் முதன்முதலாக தொழிற்பேட்டையை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் 2-வது தொழிற்பேட்டையை அமைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. மேலும் அவர்தான் இ.குமாரலிங்காபுரத்தில் தொழில் பூங்கா திட்டத்தை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 1,058 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அதில் தான் தற்போது பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்டத்தில் தொழில் பூங்காவுக்கு நடவடிக்கை எடுத்தவர்களை மறந்து விட்டு அரசு தாங்கள் கொண்டு வந்தது போல் அறிவித்துள்ளனர். இத்தொழில் பூங்காவில் ஜவுளி மட்டுமல்லாது சமையல் எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட நான்கு வகையான தொழில் அமைய வேண்டியது அவசியம் ஆகும். பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாத நிலை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தேசிய அளவில் தமிழகம் உயர்கல்வியில் 52 சதவீதத்தை எட்டியது. ஆனால் தற்போது அது 48 சதவீதமாக குறைந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உச்சியில் இருந்த கல்வியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றம் அவருக்கு மீண்டும் பணியாற்ற வாய்ப்பு அளிக்கும் என்று நம்புகிறேன். அவர் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்