கோவில் ஊழியர்கள் தாக்கியதாக கூறி போராட்டம்- பழனியில் பரபரப்பு

பக்தர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-30 21:26 GMT

பழனி,

தைப்பூச திருவிழா முடிந்ததும் பாரம்பரிய முறைப்படி சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பக்தர்கள் 2 குழுக்களாக காவடி எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த காவடி குழுவினர், கோவில் நிர்வாகம் சார்பில் ராஜகோபுரம் பகுதியில் உள்ள தரிசன பாதை வழியாக சன்னதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அதன்படி, எடப்பாடியை சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள பாதை வழியாக தரிசனத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் ஊழியர்களுக்கும், சந்திரன் என்ற பக்தருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சந்திரனை ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

இதற்கிடையே பக்தர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தங்கரத நிலை முன்பு சக பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்