பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை

பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக கட்டப்பட்ட நிழற்குடை புதர் மண்டி பாழாகி உள்ளது. இதை சீர்செய்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update:2023-09-16 10:30 IST

பள்ளிப்பட்டு தாலுகாவில் 33 கிராம ஊராட்சிகள், பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய இரண்டு பேரூராட்சிகள் உள்ளன. இந்த 33 கிராம ஊராட்சிகள், இரண்டு பேரூராட்சி பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும், தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்காகவும் பள்ளிப்பட்டு - சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு தினசரி வந்து செல்கின்றனர். இங்கு வந்து செல்லும் பொதுமக்கள் சற்று நேரம் நிழலில் அமர்ந்து செல்வதற்காக அலுவலக நுழைவாயிலில் உள்புறம் பொதுமக்கள் அமர்வதற்கான நிழற்குடை அரசு சார்பில் கட்டப்பட்டது.

ஆனால் இந்த கட்டிடத்தை சரியாக பராமரிக்காத காரணத்தால் நிழற்குடையை சுற்றி செடிகள் வளர்ந்து புதர் போல காணப்படுகிறது. தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நிற்குடையை பயன்படுத்துவதில்லை.

பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் உட்கார இடம் இன்றி ஆங்காங்கே மரங்களின் கீழ் அமர்கின்றனர். பொதுமக்கள் அமர்விற்காக பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போது பாழடைந்து உள்ளது.

இந்த கட்டிடத்தை சீர்செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்