பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கோரிக்கை நிராகரிப்பு: நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

வழக்கை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என அண்ணாமலை தரப்பில் நீதித்துறை நடுவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கோர்ட்டு நிராகரித்தது.

Update: 2024-02-19 11:40 GMT

சேலம்,

சேலத்தை சேர்ந்தவர் பியூஸ் மானூஷ். இவர், சேலம் கோர்ட்டில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க கூடாது என கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்து இருமதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு, கோர்ட்டில் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தடை வாங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மனுதாக்கல் செய்தார். இதை எதிர்த்து பியூஸ் மானூஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, இந்த வழக்கு சேலம் 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோர்ட்டில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவரது சார்பில் வக்கீல் கோர்ட்டில் ஆஜரானார்.

வழக்கை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என அவர் நீதித்துறை நடுவரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் செய்கிறார். அவரை நீதிமன்றத்திற்கு வரச்சொல்லுங்கள் என மாஜிஸ்திரேட்டு கூறினார். இதையடுத்து வழக்கை அடுத்தமாதம் (மார்ச் ) 2-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று அண்ணாமலை ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்