மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

காட்டு யானை தாக்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

Update: 2023-09-27 19:30 GMT

பந்தலூர்

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 46). மாற்றுத்திறனாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் குமார் வீட்டில் இருந்து சேரம்பாடிக்கு நடந்து சென்றார். அப்போது புதர் மறைவில் நின்றிருந்த காட்டு யானை திடீரென குமாரை தாக்கியது. இதில் குமார் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வனத்துறையினரை கண்டித்து சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வனத்துறையினர், போலீசார், சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ், துணைத்தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் ஊருக்குள் முகாமிடும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். யானை தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம், உயிரிழந்தவரின் மனைவி ராதிகாவுக்கு வனத்துறையில் தற்காலிக பணி வழங்கப்படும். ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து வனத்துறை சார்பில், காட்டு யானை தாக்கி உயிரிழந்த குமாரின் குடும்பத்தினரிடம் ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.4½ லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்