குடியரசு தின விழா: ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தின விழாவையொட்டி அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Update: 2024-01-25 03:53 GMT

சென்னை,

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்திலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதற்கான விழா மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை எதிரே நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1,250 ரெயில்வே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாக பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர். ஓடும் ரெயில்களிலும் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.

ரெயில் நிலையங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு எண் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் குடியரசு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவில்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்