நயப்பாக்கத்தில் பஸ் வசதி கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

நயப்பாக்கத்தில் முறையான பஸ் வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-14 08:59 GMT

நயப்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியர்கள் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை மற்றும் பஸ் வசதி கோரி மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில், தங்களது பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் குண்டும் குழியுமாக ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதாகவும், பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுவதாகவும், திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி வரை பஸ் வசதி செய்து தரக்கோரியும் வேண்டுகோள் விடுத்தனர். திருவள்ளூரில் இருந்து அரண்வாயல், பாப்பரம்பாக்கம், நயப்பாக்கம், தண்டலம் வழியாக பூந்தமல்லி சென்று வர பஸ் இயக்க வேண்டும்.

தற்போது காலையில் இயக்கப்படும் பஸ் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் வராமல் செல்வதாகவும், எனவே புதிய பஸ் இயக்கப்பட்டால் பள்ளி கல்லூரிகள் மற்றும் 6 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற பொதுமக்கள் திடீரென திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே திருவள்ளூர்-திருத்தணி சாலையில் பள்ளி மாணவ, மாணவியருடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்