தரமற்ற முறையில் தயாரித்த உணவுப்பொருட்கள் பறிமுதல்

கோலியனூரில் தரமற்ற முறையில் தயாரித்த உணவுப்பொருட்கள் பறிமுதல்

Update: 2022-11-24 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், இனிப்பு கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வரப்பெற்றன. இதையடுத்து நேற்று மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் சுகந்தன், வட்டார அலுவலர் அன்புபழனி ஆகியோர் கோலியனூர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், இனிப்பு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு இனிப்பு மற்றும் பேக்கரி கடையில் சமோசாக்களை தரமற்ற முறையில் தயார் செய்து விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதே கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து 140 சமோசாக்கள் மற்றும் 7 கிலோ பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர். இதுதவிர 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீசுகளை அதிகாரிகள் வழங்கினர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவுப்பொருட்களை தரமற்ற எண்ணெயினால் தயாரிக்கக்கூடாது. மீறி தயார் செய்து விற்பனைக்காக பயன்படுத்தியது தெரியவந்தால் அதுபற்றி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சம்பந்தப்பட்ட கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்