ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு - பக்தர்கள் அதிர்ச்சி

கொடி மரங்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-04 00:07 GMT

கோப்புப்படம்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாசலில் 2 யானை சிலைகள் இருந்தன. அழகான இந்த கற்சிலைகளை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காணவில்லை. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது புதிய கொடி மரங்கள் அமைக்கப்பட்டன.

ஆண்டாள் கோவிலில் உள்ள 3 கொடி மரங்களும் புதிதாக அமைக்கப்பட்டு, பழைய கொடிமரங்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. மற்ற 2 கொடி மரங்கள் மாயமாகி உள்ளன.

எனவே யானை சிலைகள் மற்றும் கொடி மரங்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை கண்டுபிடித்து தரவேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் கடத்தப்பட்டுள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்