எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது: 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி - முழு விவரம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Update: 2024-05-10 04:05 GMT

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்வுத்துறை அதிகாரிகள் தேர்வு முடிவை வெளியிட்டனர். மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.55 ஆக அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எப்போதும்போல மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 3,96,152 பேரும், மாணவிகள் 4,22,591 பேரும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சிவகங்கை மாவட்டம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

96.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

பாடவாரியாக 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:-

1.தமிழ் - 8

2.ஆங்கிலம் - 415

3. கணிதம் - 20,691

4. அறிவியல் - 5,104

5.சமூக அறிவியல் - 4,428

பாட வாரியான தேர்ச்சி சதவிகிதம்:-

1. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் - 96.85 சதவீதம்

2. ஆங்கிலம் - 99.15 சதவீதம்

3. கணிதம் - 96.78 சதவீதம்

4. அறிவியல் - 96.72 சதவீதம்

5. சமூக அறிவியல் - 95.74 சதவீதம்

1,364 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

260 சிறைவாசிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.69.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய 13,510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12,491 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.45.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களுக்கு சென்று மாணவ-மாணவிகள் தங்களுடைய பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




Tags:    

மேலும் செய்திகள்