முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

முதியோர் உதவித்தொகை முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2024-03-04 11:44 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்குவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 70 பயனாளிகளுக்கு கடந்த ஓராண்டில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய ரூ.27 லட்சம், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதற்கு பதிலாக தனிநபர் ஒருவரின் கனக்கில் செலுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகளின் வங்கிக் கணக்குடன் அவர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால், பயனாளிகளில் எவரேனும் உயிரிழந்தால் அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக செயலிழந்து விடும். அவ்வாறு செயலிழந்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் முதியோர் உதவித் தொகை மீண்டும் அரசின் கணக்கிற்கே திரும்பி வரும் வகையில் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு திரும்பி வந்த தொகை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படாமல் சிறப்பு வட்டாட்சியர் ஒருவரின் அலுவலகத்தில் பணி செய்யும் தற்காலிக பணியாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பணத்தை தங்கள் கணக்கிலிருந்து எடுக்காமல் வைத்திருந்த பயனாளிகளின் கணக்கிலிருந்தும் பணம் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை உயரதிகாரிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் இத்தகைய மோசடிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

புதுக்கோட்டையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் வேறு சில மாவட்டங்களிலும் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. அரசின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட வேண்டிய தொகை தனி நபர் ஒருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது எவ்வாறு? இத்தகைய பரிமாற்றங்களை தற்காலிக பணியாளர் ஒருவர் எவ்வாறு செய்ய முடியும்? அவருக்கு மேல் இருந்த சிறப்பு வட்டாட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த முறைகேட்டை கண்காணித்துத் தடுக்கத் தவறினார்களா? அல்லது இந்த முறைகேட்டுக்கு துணை போனார்களா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு அரசுத் தரப்பிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

ஓராண்டிற்கும் மேலாக இந்த முறைகேடு நடைபெற்று வந்த நிலையில், இப்போது தான் இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஓராண்டாக இந்த முறைகேட்டை கண்டிபிடித்து தடுக்காமல் அரசு நிர்வாகம் உறங்கிக் கொண்டிருந்ததா? என்ற பொதுமக்களின் வினாக்களுக்கு தமிழக அரசு விடையளிக்க வேண்டும். இந்த மோசடிக்கு காரணமானவர்கள் யார்? அதற்கு துணை போனவர்கள் யார்? தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டங்களில் எல்லாம் இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளன? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்