வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலம் - தமிழக அரசு பெருமிதம்

உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

Update: 2024-05-23 07:00 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் மீது மிகுந்த அன்பு கொண்டு விவசாயத்துறை, வேளாண்மைத்துறை என அழைக்கப்பட்ட துறையின் பெயரை வேளாண்மை - உழவர் நலத்துறை எனத்தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டிலே அறிவித்து உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இத்திட்டங்களால் வேளாண் உற்பத்தி பெருகியுள்ளது; உழவர்கள் வளம் பெறுகின்றனர்; தமிழ்நாடு உணவு உற்பத்தியில் முன்னேறியுள்ளது.

வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டமாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.

24.50 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை:-

பயிர்க் காபீட்டுத் திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 24 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 4,366 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முதல்-அமைச்சர் பெற்றுத் தந்துள்ளார்.

பயிர்ச் சேதங்களுக்கு நிவாரணம்:-

கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 12.88 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் 582 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மழை, வறட்சி ஆகியவற்றால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மொத்தம் 4,342 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 24 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கரும்பு விவசாயிகள் பயன்:-

கரும்பு விவசாய நிலப்பரப்பு 95 ஆயிரம் எக்டரிலிருந்து 1 லட்சத்து 54 ஆயிரம் எக்டராக அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக 651 கோடி ரூபாய் 4 லட்சத்து 40 ஆயிரத்து 575 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 71 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக 600 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

270 கோடி ரூபாயில் விவசாய இயந்திரங்கள்:-

விவசாயிகளுக்கு மூன்றாண்டுகளில் 2,163 டிராக்டர்கள், 9,303 பவர் டில்லர்கள். 288 அறுவடை இயந்திரங்கள். 2,868 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 16,432 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.270 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்:-

ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 56.97 கோடி ரூபாயில் 1,226 கிணறுகள், மின்சார / சூரிய சக்தி பம்ப்செட்டுகள் 100 சதவிகித மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர்ப்பாசன வசதி அமைக்க 56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகள்:-

27.5 கோடி ரூபாய் செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 10 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேளாண்பல்கலைக்கழகம்:-

வேளாண்பல்கலைக்கழகத்தின் மூன்று புதிய வேளாண் கல்லூரிகளும் ஒரு தோட்டக்கலை கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் 3,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, நாகை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 13 கோடியே 40 லட்சம் ரூபாய்ச் செலவில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று வளாகம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகள் பயனடைகின்றனர்.

உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு:-

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் 11.74 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறுவை நெல்சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனை:-

137 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-ல் 4.90 லட்சம் ஏக்கரிலும், 2022-ல் 5.36 இலட்சம் ஏக்கரிலும் 2023-ஆம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரிலும் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர்.

விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள்:-

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்திட ரூ.14.97 கோடி செலவில் 1.75,052 விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன. நெற்பயிர் உற்பத்தி திறனை அதிகரித்திட ரூ.12.96 கோடியில் துத்தநாகம் சல்பேட் மற்றும் ஜிம்பம் வழங்கப்பட்டு 4.50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம்:-

மூன்றாண்டுகளில் 100 கோடியே 25 லட்சம் செலவில் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 1.11.494 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பயறு பெருக்கத் திட்டம்

ரூ.138 கோடியே 82 லட்சம் செலவில் பயறு பெருக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,76,507 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மூன்றாண்டுகளில் 11,76,400 எக்டேர் நிலங்களில் ரூ.83.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் எள். சோயா, பீன்ஸ் முதலான எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு 3,04,248 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தென்னை சாகுபடி:-

தென்னை சாகுபடி பரப்பை அதிகரித்திடும் திட்டத்தின் கீழ் ரூ.40.59 கோடி செலவில் 19.922 தென்னை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிட பழங்குடியினருக்கு 90 சதவீத மானியத்திலும், சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்:-

முதல்-அமைச்சரின் தொலைநோக்குப் பார்வையின்படி தமிழ்நாட்டின் நிகர சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட 12,525 கிராம ஊராட்சிகளிலும் நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றி ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்துடன் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2021-22- ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் ரூ.613.82 கோடியில் 7,725 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் மேற்கொள்ப்பட்டு 22,306 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும் 3,536 ஏக்கர் பரப்பளவில் பழமரக் கன்றுகளும் நடவு செய்யப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தரச் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 28,27,373 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

விருதுகள்:-

திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021 முதல் வேளாண்துறையில் அடைந்துவரும் முன்னேற்றங்களுக்காகப் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் 2022-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் ஒரே இடத்தில் நான்கு மணி நேரத்தில் 6 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டு முடித்தமைக்காக எலைட் உலக சாதனை புத்தகத்தில் தமிழ்நாடு இடம் பெற்றுப் பாராட்டப்பட்டது.

2023-ம் ஆண்டில் மக்காச்சோளம் உற்பத்தி வீழ்ச்சியைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட சிறந்த ஆராய்ச்சித் திட்டங்களுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட ஸ்கோச் (SKOCH) ஆர்டர் ஆப் மெரிட் விருது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் அத்தியந்தலில் இயங்கும் சிறுதானிய மகத்துவ மையம் 2023-ம் ஆண்டிற்கான இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வழங்கும் சிறந்த சிறுதானிய மையத்திற்கான விருது. உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாடு வேளாண்மைத்துறைக்குப் புகழ் சேர்த்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால், வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப் பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்