கோவை லிங்காபுரம் அருகே உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியதால் படகு போக்குவரத்தைத் தொடங்கிய கிராம மக்கள்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம், காந்தவயல் இடையேயான பாதை தண்ணீரில் மூழ்கியதால் கிராம மக்கள் படகில் போக்குவரத்தைத் துவங்கியுள்ளனர்.

Update: 2022-11-09 17:09 GMT

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள காந்தையாற்றின் மறுகரையில் காந்தவயல், காந்தையூர் உள்ளிட்ட பல மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தென்மேற்கு பருவமழையால் நீரில் மூழ்கியது. இதனால் கிராம மக்கள் ஆபத்தான பரிசல் பயணத்தை மேற்கொண்டு காந்தையாற்றைக் கடந்து வந்தனர்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியதுடன், இணைப்புச் சாலைகளும் தண்ணீரில் மூழ்கின.

இந்த சூழலில் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு கிராமங்களுக்கு இடையே மோட்டர் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கும் வயதானவர்களுக்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களுக்கு விரைவில் பேரூராட்சி சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்