'கவர்னர் தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

கவர்னருக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-05-24 16:36 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கவர்னர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு இருந்தது.

ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கவர்னர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், 'கவர்னர் தற்போது திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"திருக்குறளில் இல்லாதது ஒன்றும் இல்லை. திருவள்ளுவருக்கு சாதி, மதம், இனம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரை காவி உடையில் சித்தரிப்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கவர்னருக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். இந்த சூழலில் தற்போது திருவள்ளுவர் திருநாள் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? திருவள்ளுவரை காவி உடையில் சித்தரிப்பதை ஒட்டுமொத்த தமிழினத்தையும், திருவள்ளுவரையும் அவமானப்படுத்தும் செயலாகவே பார்க்கிறோம். கவர்னரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்