வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-09-08 12:05 GMT

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்

ஆந்திர மாநிலம் ஐதராபாத் சனத் நகர் பகுதியை சேர்ந்தவர் டோபி சாஹேப் (வயது 66). இவருக்கு நிஸார் அஹமது (41) என்ற மகனும், சாயிரா பேகம் (38) என்ற மகளும் இருந்தனர். சாயிரா பேகத்தை ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் பகுதியை சேர்ந்த பஷிர் என்பவரது மகன் சதக் அலி (38) என்பவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது ரூ.8 லட்சமும், 25 பவுன் தங்க நகைகளும் வரதட்சணையாக சதக் அலி பெற்றார்.

தொடர்ந்து திருமணம் முடிந்தவுடன் சதக் அலி சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் சென்னை கொட்டிவாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன், மனைவி இருவரும் தங்கி இருந்தனர்.

அப்போது சதக் அலி தனக்கு வரதட்சணை போதவில்லை எனவும், மேலும், இருசக்கர வாகனம், வீடு கட்டுவதற்கு இடம் வாங்கி தர வேண்டும் அல்லது ரூ.30 லட்சம் தர வேண்டும் என்று தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மன வேதனை அடைந்த சாயிரா பேகம் 29-12-2011 அன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாயிரா பேகத்தின் அண்ணன் நிஸார் அகமது நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி, சாயிரா பேகத்தின் கணவர் சதக் அலிக்கு (38) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும், சாயிரா பேகத்தின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர். அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்