ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு அரசு ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

Update: 2024-05-10 01:54 GMT

சென்னை,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (வயது 45). இவர் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணி நிமித்தமாக சென்னைக்கு பயணம் செய்தார்.

இவருடைய எதிர் இருக்கையில், சென்னையை சேர்ந்த 34 வயது பெண், தனது கணவருடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்ல பயணித்தார். அப்போது ஜிம்ரிஸ் ராஜ்குமார் அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் நள்ளிரவு ஆனதும் அந்த பெண் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது ஜிம்ரிஸ் ராஜ்குமார் மீண்டும் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக ரெயிலில் பயணம் செய்த பெண்ணின் கணவர் மற்றும் சக பயணிகளும் விழித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜிம்ரிஸ் ராஜ்குமாரை பிடித்து வைத்தனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள், ஜிம்ரிஸ் ராஜ்குமாரை ஈரோடு ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஜிம்ரிஸ் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம்ரிஸ் ராஜ்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்