திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டிதிருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்;

Update:2023-03-08 00:15 IST

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுஷ் ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று வந்தார். பின்னர் அவர் பீமரத சாந்தி ஹோமம், கோபூஜை, கஜபூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கினார். இதில் தி.மு.க. செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர விழாவையொட்டி எமன் சம்ஹார ஐதீக நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்