டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பராக் அகர்வாலுக்கு ரூ.346 கோடி இழப்பீடு?

டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.;

Update:2022-10-28 16:45 IST

சான் பிரான்சிஸ்கோ,

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் மிகப்பிரபலமான சமூக ஊடகமான டுவிட்டர் நிறுவனத்தை இன்று அதிகாரபூர்வமாக கையகப்படுத்தினார். மேலும், ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

குறிப்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, பராக் மற்றும் நெட் செகல் ஆகியோர் டுவிட்டர் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், பராக் அகர்வாலுக்கு இழப்பீடாக டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து சுமார் 42 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக டுவிட்டர் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் திடீரெனப் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நிர்வாக மாற்றத்தாலோ பணிநீக்கம் செய்யப்பட்டாலோ வேலை நீக்க ஊதியம், பகிரப்படாத பங்குகள், போனஸ் எனப் பலவற்றை பெறுவார்கள்.

அந்த வகையில் பராக் அகர்வாலுக்கு இழப்பீடாக ரூ.346 கோடி கிடைக்கலாம் என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டுவிட்டர் நிறுவனத்தில் அகர்வாலின் ஈக்விட்டி பங்குகள் மற்றும் அடிப்படை ஊதியத்தின் ஆண்டு வருவாய் உள்ளிட்டவற்றை மதிப்பிட்டு இந்த தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்