கடவுளை காணலாம்... கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு

கென்யாவில் கடவுளை காணலாம் என கூறி விரதம், தற்கொலை செய்ய வைத்ததில் உயிரிழந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 201 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. 600 பேரை காணவில்லை.

Update: 2023-05-15 13:02 GMT

நைரோபி,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என கடந்த மாதம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட தேடலில் இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறினார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறும்போது, நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் தெங்கி மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர். அவரது சீடர்களாகி உள்ளனர்.

இதன்படி, சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்.

அவர்களில் கடந்த மாதம் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றி உள்ளனர். இதில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்.

இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்து விட்டார்.

சீடர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

கென்யாவின் உள்துறை மந்திரி கித்துரே கிந்திகி சம்பவம் பற்றி கூறும்போது, நமது மனசாட்சியை உலுக்கிய இந்த செயலை செய்து, பல அப்பாவி ஆன்மாக்களுக்கு எதிராக கொடுமையாக நடந்து கொண்ட அந்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது மட்டுமின்றி, ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயம், மசூதி, கோவில் ஆகியவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என கூறினார்.

இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல அதிர்ச்சிகர விசயங்கள் தெரிய வந்து உள்ளன.

அந்நாட்டின் மண்டல ஆணையாளர் ரோடா ஒனியான்சா செய்தியாளர்களிடம் கூறும்போது, எங்களுடைய தடய அறிவியல் குழு இன்று 22 உடல்களை வெளியே எடுக்க முடிந்தது. ஆனால், யாரையும் காப்பாற்றிய தகவல் இல்லை. இதுவரை போலீசார் 201 உடல்களை மீட்டு உள்ளனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என கூறியுள்ளார்.

தொடர்ச்சியான திகிலூட்டும் இதுபோன்ற வெளிவந்து கொண்டிருக்கும் விசயங்களை பற்றி பாதிரியார் டைட்டஸ் கடானா என்பவர் கூறும்போது, போலி மத சாமியார்களின் முதல் இலக்காக குழந்தைகளே இருந்து உள்ளனர்.

அவர்களை எளிதில் வசீகரித்து உள்ளனர். சூரியனின் முன் விரதம் இருக்கும்படி குழந்தைகளுக்கு கட்டளையிடப்பட்டு உள்ளது. அதனால், அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி கூறப்பட்டு உள்ளது.

இந்த தற்கொலை திட்டத்தின் அடுத்த பகுதியாக, முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் அடுத்தடுத்து இருந்தனர் என பாதிரியார் கடானா கூறியுள்ளார்.

இந்த கிறிஸ்தவ சமய மரபு சார்ந்த விசயங்களில் 2015-ம் ஆண்டில் கடானா இணைந்து உள்ளார். ஆனால், அது தவறான போக்கை கொண்டுள்ளது என உணர்ந்த அவர் எச்சரிக்கையுடன் விலகி இருக்கிறார். அதனால் தற்போது அவர், போலீசார் விசாரணைக்கு உதவி வருகிறார்.

அவர் கூறும்போது, குழந்தைகளை குடிசைக்குள் 5 நாட்கள் வரை உணவு அல்லது குடிநீரின்றி பூட்டி வைத்தனர். அதன்பின்னர், அவர்களை போர்வையில் சுற்றி புதைத்தனர். இதில், மூச்சு விட்டு கொண்டிருந்தவர்களும் அடங்குவார்கள் என கூறி அதிர்ச்சியடைய வைக்கிறார்.

மெக்கன்சியின் சீடர்களை, பாலித்தீன் சீட்டுகளால் தயாரான தற்காலிக வீடுகளில் தங்க வைத்த நிலையில், மெக்கன்சியோ நன்றாக மேற்கூரை போடப்பட்ட, நாற்காலி, தொலைக்காட்சி மற்றும் டைல்ஸ் பதித்த கழிவறை என ஆடம்பரத்துடன் வசித்து வந்து உள்ளார் என தி டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

சில உடல்களின் கைகள் மின் வயர்களால் கட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரு சில உடலின் பாகங்கள் காணாமல் போயுள்ளன. இதனால், உடல் உறுப்புகளை திருடும் கும்பலின் செயலும் உள்ளது என கூறப்படுகிறது.

அந்நாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வந்து உள்ளது. இதனால், காடு முழுவதும் உடல்களை தேடி அதிகாரிகள் அலைந்து செல்கின்றனர். இந்த சம்பவத்தில் மெக்கன்சி, அவரது மனைவி மற்றும் மெக்கன்சியின் பல்வேறு கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்