தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தம் வேண்டாம்... குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து இரத்தத்தைப் பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என குழந்தையின் பெற்றோர் கூறியுள்ளனர்.;

Update:2022-11-30 20:55 IST

வெல்லிங்டன்,

கொரோனா பாதிப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பு மருந்து நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் மற்றொரு தரப்பு மக்களிடையே தடுப்பூசிக்கு எதிரான கருத்து நிலவி வருகிறது. அவர்கள் தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நியூசிலாந்து நாட்டில் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் நடத்திய நேர்காணல் ஒன்றில், ஒரு தம்பதியினர் கலந்து கொண்டு தங்கள் 4 மாத குழந்தையின் ஆபத்தான உடல்நிலை குறித்து விவரித்தனர்.

தங்கள் குழந்தைக்கு உடனடியாக இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தேவையான இரத்தத்தை தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

'தடுப்பூசியில் தோய்க்கப்பட்ட இரத்தம்' தனது குழந்தைக்கு வேண்டாம் எனவும், இது தவிர மருத்துவர்கள் கூறும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தாங்கள் உடன்படுவதாகவும் அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நியூசிலாந்து பத்திரிக்கையில் வெளியான செய்தியின்படி, சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது நியூசிலாந்து சுகாதாரத்துறை சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குழந்தையின் பாதுகாவலாராக இருக்கும் உரிமையை அந்த பெற்றோரிடம் இருந்து பறித்து, கோர்ட் அந்த உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இரத்த தானம் செய்யப்படும் போது தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என பிரிக்கப்படுவது இல்லை என்றும், தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தத்தை பெறுபவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நியூசிலாந்து நாட்டின் இரத்த தான கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்