சீனாவுடன் கைகோர்த்து சட்டவிரோத அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான்...!! வெளியான திடுக் தகவல்

பாகிஸ்தானின் இரு நகரங்களில் 300 மெகா வாட் திறன் படைத்த 4 அணு உலைகள், 1,000 மெகா வாட் திறன் படைத்த 2 அணு உலைகளை, சீனா கட்டி தந்துள்ளது.

Update: 2024-03-02 12:23 GMT

புனே,

அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலக அளவில் அழிவை ஏற்படுத்த கூடிய இந்த பொருட்களால் கடந்த காலங்களில் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தனர். இந்நிலையில், சட்டவிரோத வகையில் அணு ஆயுத பொருட்களை பாகிஸ்தான் பெற்று அதனை ராக்கெட் உற்பத்திக்கு பயன்படுத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதன்படி, சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி சென்ற சி.எம்.ஏ. சி.ஜி.எம். ஆட்டிலா என்ற வர்த்தக கப்பல் ஒன்று மும்பை நவசேவா துறைமுகம் பகுதியில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. உளவு பிரிவு அடிப்படையில் கிடைத்த தகவலின்படி, அந்த கப்பலில் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், அணு ஆயுத திட்டத்திற்கு பயன்படுத்தப்பட கூடிய பொருட்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என அதிகாரிகள் சந்தேகித்து உள்ளனர். மால்டா நாட்டு கொடியுடன் வந்த அந்த கப்பலை சுங்க இலாகா அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

அதில், இத்தாலி நாட்டு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சி.என்.சி. இயந்திரம் ஒன்று இருந்துள்ளது. இந்த வகை இயந்திரங்கள், அடிப்படையில் கணினியால் கட்டுப்படுத்த கூடியவை. இந்த பொருட்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை சேர்ந்த குழுவினரும் ஆய்வு செய்தனர். அதன் முடிவில், அணு ஆயுத திட்டத்திற்கு பாகிஸ்தான் இதனை பயன்படுத்த கூடும் என அதிகாரிகள் தரப்பில் சான்றளித்து உள்ளனர்.

இந்த பொருட்கள், பாகிஸ்தானின் ராணுவ வளர்ச்சி திட்டத்திற்கான முக்கிய பொருட்களை தயாரிக்க பயன்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர். இந்த சி.என்.சி. இயந்திரம் ஆனது, வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆய்வில் கிடைத்த பொருட்களின் ரசீது உள்ளிட்ட ஆவணங்களின்படி, இந்த பொருட்கள் சீனாவின் ஷாங்காய் ஜே.எக்ஸ்.இ. குளோபல் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதும், அதனை பாகிஸ்தான் விங்ஸ் தனியார் நிறுவனம் பெறுவதற்கான ஆவண சான்றுகளும் காணப்படுகின்றன. ஆனால், அதிலும் சட்டவிரோத செயல் நடந்துள்ளது.

22,180 கிலோ எடை கொண்ட அந்த பொருளானது, சீன நாட்டின் தையுவான் சுரங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து கப்பலில் ஏற்றப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள காஸ்மோஸ் என்ஜினீயரிங் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட இருந்தது அதிகாரிகளின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்று நடைபெறுவது இது முதன்முறையல்ல. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதியில் இருந்து, இந்நிறுவனம் இந்தியாவின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளது. அப்போது இந்திய அதிகாரிகள், இதே நவசேவா துறைமுகத்தில் நடத்திய சோதனையில், இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுபற்றி இந்திய அதிகாரிகள் கூறும்போது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பெறுவதற்கு சீனாவை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்க கூடும் என்று கவலை தெரிவித்து உள்ளனர்.

இதற்கேற்ப, கடந்த 2020-ம் ஆண்டு, சீன கப்பல் ஒன்றில் தொழிற்சாலைக்கான சாதனங்கள் என்று மறைத்து, கொண்டு வரப்பட்ட பொருட்கள் உண்மையில், ஏவுகணை உற்பத்திக்கான முக்கிய பொருட்கள் ஆகும் என விசாரணையில் தெரிய வந்தது.

சீனாவின் டாய் குய் யுன் என்ற பெயரிடப்பட்ட அந்த கப்பலானது ஹாங்காங் கொடியை சுமந்து வந்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்ததில், திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. தொழிற்சாலைக்கான பொருட்கள் என்ற பெயரில் ராக்கெட் தயாரிப்புக்கான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இது ராக்கெட்டுகளுக்கான சட்டவிரோத வர்த்தகத்தில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது என்பதற்கான வலுவான சான்றாக அமைந்தது.

ராக்கெட் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு விதிகளை மீறும் செயலிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த சூழலில், 2023-ம் ஆண்டு ஜூனில், சீனாவின் 3 நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழில் மற்றும் பாதுகாப்பு வாரியம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது.

அவை, பாகிஸ்தானின் ராக்கெட் திட்டங்களுக்கான தயாரிப்பு பொருட்களை விநியோகிப்பதில் தொடர்பில் இருந்தன என்பது தெரிய வந்தது. இறுதியாக, இந்திய அதிகாரிகள் கூறும்போது, பாகிஸ்தானுக்கு சீனா பல வழிகளில் உதவி வருகிறது. இதன்படி, உணர்திறன் வாய்ந்த பொருட்கள் அல்லது சாதனங்களை விநியோகிப்பது, ராணுவ உபயோகத்திற்கான பொருட்கள் அல்லது சாதனங்களை விநியோகிப்பது போன்ற செயல்களில் சீனா ஈடுபட்டு உள்ளது.

இவை தவிர, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிடம் இருந்து அவற்றை கொள்முதல் செய்வதற்கு உதவி வருவதுடன், அணு சக்தி உலைகளை கட்டுவதற்கும் உதவி புரிந்துள்ளது. இதன்படி, சாஷ்ம மற்றும் கராச்சி நகரங்களில் முறையே 300 மெகா வாட் திறன் படைத்த 4 அணு உலைகள், 1,000 மெகா வாட் திறன் படைத்த 2 அணு உலைகள் ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு, சீனா கட்டி தந்துள்ளது. சாஷ்ம நகரில் மற்றொரு 1,000 மெகாவாட் அணு உலையை கட்டவும் சீனா திட்டமிட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக அத்துமீறும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் குற்றச்சாட்டுகளுடன் சர்வதேச நாடுகளின் விதிகளையும் மீறி செயல்படுவது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்