அமெரிக்கா: பள்ளியில் கால்பந்து போட்டியின்போது துப்பாக்கி சூடு; வீடியோ வெளியீடு

அமெரிக்காவில் பள்ளியில் கால்பந்து போட்டியின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் காயமடைந்து உள்ளனர்.

Update: 2022-10-09 04:26 GMT



ஒஹியோ,


அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ என்ற நகரில் அமைந்த விட்மர் உயர்நிலை பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அந்த பள்ளிக்கும், மத்திய கத்தோலிக்க உயர்நிலை பள்ளிக்கும் இடையே நேற்றிரவு போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

விறுவிறுப்புடன் நடந்த போட்டியில் 3-வது சுற்று முடிந்து அடுத்த சுற்றுக்கு சென்றது. இதனால், போட்டி நடந்த பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த சூழலில், பள்ளியில் கால்பந்து போட்டி நடந்த பகுதிக்கு வெளியே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இந்த துப்பாக்கி சூடு பற்றி தொலிடோ காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றிரவு 9.32 மணியளவில், போட்டி நடந்த பகுதியில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர், லூக்காஸ் கவுன்டி காவலர்களுக்கு, விட்மர் நினைவு மைதானத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சி நடத்துபவர்கள், போட்டியாளர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்புடன் வெளியேற்றும் பணியில் அந்த அதிகாரி ஈடுபட்டு உள்ளார். பாதிக்கப்பட்டோரை தேடியும் உள்ளார் என தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில், 2 முதியவர்கள் மற்றும் இளைஞர் ஒருவர் என 3 பேர் காயமடைந்து கால்பந்து மைதானம் அருகே கிடந்து உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சென்று, காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவ பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பிடிபடவில்லை. அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.4 லட்சம் பரிசு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்