கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: குலுங்கிய வீடுகள்..மக்கள் பீதி
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.;
Photo Credit: AP
போகோடா,
தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பின் அதிர்வும் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்து இருந்ததைக் காண முடிந்தது. கொலம்பியாவில் உள்ள மெட்ல்லின் மற்றும் காலி உள்ளிட்ட நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணர முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.