திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2017-03-09 22:30 GMT

திருவொற்றியூர்,

பழமைவாய்ந்த திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 3–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள 16 கால் மண்டபம் முன் அலங்கரிக்கப்பட்ட 41 அடி உயர மரத்தேரில் உற்சவர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் எழுந்தருளினார். பின்னர் சிவாச்சாரியார்கள் பச்சை கொடி அசைத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

திரளான பக்தர்கள் பங்கேற்பு

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், பகுதி செயலாளர் கிருஷ்ணன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பக்தியோடு ‘தியாகராஜா’, ‘ஓம் நமச்சிவாயா’ என்று பக்தி கோ‌ஷமிட்டபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரடி வீதியில் தொடங்கி திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக நான்கு மாட வீதிகளில் ஆடி அசைந்தபடி தேர் வலம் வந்தது.

அப்போது ஆங்காங்கே நின்றிருந்த பக்தர்கள், சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். தேர் செல்லும் வழியில் சாலையில் வெப்பத்தை தணிக்க மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. திருத்தேருக்கு முன்னால் வடிவுடை மாணிக்கம் சங்கநாத ஜனசபா சார்பில் 108 பக்தர்கள் சங்கநாதம் முழங்கியபடி நடந்து சென்றனர். பகல் 2 மணியளவில் தேர், நிலையை வந்தடைந்தது.

மேலும் செய்திகள்