மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டம்

மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2018-10-14 22:30 GMT
திருவொற்றியூர்,

மணலி புதுநகர் வைகுண்டபுரத்தில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி மாத தேர்திருவிழா மற்றும் திருஏடுவாசிப்பு கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் தினமும் காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5 மணிக்கு திருஏடுவாசிப்பு நடைபெற்றது.

தினமும் இரவில் அய்யா வைகுண்டர் காளை, அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அய்யா திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை உகப்படிப்பும், அதைதொடர்ந்து திருத்தேர் அலங்காரம் செய்தல், பணிவிடை நடைபெற்றது.

இதையடுத்து மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரமும், 36 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார். முன்னதாக தேர் புறப்படுவதை குறிக்கும் வகையில் வானவேடிக்கை, சங்கு முழக்கம், நாதஸ்வர கச்சேரி, செண்டை மேளம் முழங்கப்பட்டது.

இதில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, கொட்டிவாக்கம் முருகன், ராயபுரம் மனோ, ராபர்ட் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருத்தேரில் எழுந்தருளிய அய்யா, மணலி புதுநகர் பகுதிகளில் வீதிஉலா வந்து, பின்னர் கோவிலை வந்தடைந்தார்.

விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்