கேட்ட வரங்களைத் தரும் ஆதி அத்தி வரதர்

பழமையும், கோவில்களை அதிகம் கொண்ட நகரம் என்ற பெருமையும் கொண்டது காஞ்சிபுரம். ‘க’ என்பதற்கு ‘பிரம்மன்’ என்று பொருள்.

Update: 2019-08-06 10:48 GMT
‘அஞ்சிரம்’ என்றால் ‘பூஜிக்கப் படல்’ என்று அர்த்தம். பிரம்மனால் பூஜிக்கப்பட்ட இடம் என்பதால், ‘கஞ்சிபுரம்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் ‘காஞ்சிபுரம்’ என்றானதாக கூறப்படுகிறது.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில், 14 திவ்யதேசங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கின்றன. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் மட்டுமே ‘பெரிய கோவில்’ என்றும், திருப்பதி மட்டுமே ‘திருமலை’ என்றும், காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயம் மட்டுமே ‘பெருமாள் கோவில்’ என்றும் சிறப்பு பெற்று விளங்குகின்றன.

இத்தகைய பெருமை மிகுந்த காஞ்சிபுரத்தில் உள்ள இறைவனை, கிரேதா யுகத்தில் பிரம்மதேவனும், திரேதா யுகத்தில் கஜேந்திரன் என்ற இந்திரனும், துவாபர யுகத்தில் பிரகஸ்பதியும், கலியுகத்தில் அனந்தன் என்ற நாகமும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

முப்பெரும் தேவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் துணையின்றி, முப்பெரும் தேவர்களால் தனித்து யாகம் செய்து வெற்றி காண முடியாது என்று ஒரு பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில் பிரம்மதேவன், மகாவிஷ்ணுவை நினைத்து மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த நினைத்தார். அதற்காக அவர் அத்தி மரங்கள் சூழ்ந்த இடத்தை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் சரஸ்வதி தேவி, பிரம்மதேவனின் யாகத்தை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் செய்தாள். எதுவும் பலன் தராத நிலையில், வேகவதி என்ற நதியாக பெருக்கெடுத்து, யாகம் நடைபெற்ற இடத்தை நோக்கி பெரும் சீற்றத்தோடு பாய்ந்து வந்தாள். அப்போது திருமால், நதிக்கு எதிரே சயன கோலத்தில் அணை போல படுத்துக் கொண்டார். இதையடுத்து பிரம்மதேவன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

யாகத்தின் முடிவில் யாக குண்டத்தில் இருந்து லட்சுமியோடு, வரதராஜப் பெருமாள் காட்சியளித்து பிரம்மதேவனுக்கு அருளினார். யாகத்தில் பங்கு கொண்ட தேவர்கள் அனைவருக்கும் கேட்ட வரத்தை எல்லாம் கொடுத்ததால், அவர் ‘வரதர்’ என்று அழைக்கப்பட்டார். அதோடு பிரம்மதேவனுக்கு காட்சி தந்த பெருமாள், அத்தி மரத்தால் ஆனவர் என்பதால் ‘அத்தி வரதர்’ என்று பெயர் பெற்றார்.

இவரே பழங்காலத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் மூலவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் ஒரு காலத்தில் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அத்தி வரதர், “பிரம்மனின் யாகத் தீயில் இருந்து வெளியே வந்ததால், என்னுடைய உடல் எப்போதும் வெப்பமாகவே இருக்கிறது. எனவே என்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்யும்படியும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால், நிரந்தரமாக புஷ்கரணியில் எழுந்தருளச் செய்யுங்கள்” என்றும் உத்தரவிட்டார்.

‘அத்தி வரதரை குளத்தில் எழுந்தருளச் செய்தால், மூலவருக்கு என்ன செய்வது?’ என்று அர்ச்சகர் குழம்பிப் போனார். மீண்டும் அர்ச்சகரின் கனவில் வந்த அத்தி வரதர், “சில மைல் தொலைவில் பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போலவே ஒரு பிரதிபிம்பம் இருக்கிறது. அதைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்துகொள்ளுங்கள். என்னை 40 வருடத்திற்கு ஒரு முறை வெளியேக் கொண்டு வந்து ஒரு மண்டல காலம் வைத்து பூஜை செய்யுங்கள். பின்னர் மீண்டும் புஷ் கரணியிலேயே எழுந்தருளச் செய்யுங்கள்” என்று சொன்னார். அதன்படியே அத்தி வரதர், வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டதாக ஆலயத்தின் தொன்ம வரலாறு சொல் கிறது.

அன்னியர்கள் படையெடுப்பின் போது, புகழ்பெற்ற ஆலயங்களில் இருக்கும் விக்கிரகங்கள் கடத்தப்பட்டன. பல விக்கிரகங்கள் சிதைக்கப்பட்டன. அதுபோன்ற ஒரு அவலம் அத்தி வரதருக்கும் வந்துவிடக்கூடாதே என்ற காரணத்தால், குளத்தில் ஒரு சிறிய மண்டபம் கட்டி, அதில் வைத்து விட்டதாகவும், 40 வருடத்திற்கு பின்னர் அவரை எடுத்து ஒரு மண்டலம் பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் அதுவே நடைமுறை வழக்கமாகிப் போனதாகவும் மற்றொரு காரண காரியம் கூறுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரிசனம் தர வரும் அத்தி வரதரைக் காணும் பாக்கியம் இந்த ஆண்டு பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு, அத்தி வரதர் அருள்காட்சி தந்து கொண்டிருக்கிறார். இவர் வருகிற 17-ந் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருப்பார். இந்த முறை தரிசிக்க இயலாதவர்கள், அவரைக் காண இன்னும் 40 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும் என்பதால், இப்போதே சென்று தரிசித்து வரலாமே..

மேலும் செய்திகள்