மனிதர்கள் அகற்ற வேண்டிய ஆறு எதிரிகள்

மனிதர்களின் வாழ்வில், அவர்களுக்கான அக எதிரிகளாக காமம், குரோதம், லோபம், மோகம், அகங்காரம், மதஸர்யம் ஆகியவை இருக்கின்றன. இந்த 6 எதிரிகளையும் நம் உள்ளத்தை விட்டு அகற்றிவிட்டால், வாழ்வில் உயர்வு பெறலாம். நீக்கப்பட வேண்டிய இந்த ஆறு விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

Update: 2021-05-25 15:53 GMT
காமம்:- இதற்கு ‘ஆவல்’, ‘ஆசை’ என்று பொருள். நியதிக்கு உட்பட்ட ஆசை எப்போதுமே ஆக்கப்பூர்வமானது. அதுவே தர்ம நியதியை கடந்த ஆசை, மனிதர்களுக்கு அழிவையே தரும். பணம், பொருள், பதவி, பெண் போன்றவற்றின் மீது தீராத ஆசை கொள்வது குற்றமாகும். ஆகையால் ஆசையை அடக்க வேண்டும்.

மோகம்:- இதற்கு ‘பற்றுதல்’, ‘மயக்கம்’ என்று பொருள்படும். ஒரு பொருளின் மீது கொண்ட ஆசை, அளவற்ற பற்றுதலாக மாறும். அந்த பொருளின் மீது ஏற்பட்ட மயக்கம், அதை தனதாக்கிக்கொள்ளும் வரை ஓயாது. அதனால் நமக்கு கிடைப்பது துன்பம்தான். ஒரு பொருளின் மீதான மயக்கம், ஒருவனை தீய செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. எனவே பற்றுதலை கைவிட வேண்டும்.

லோபம்:- இதற்கு ‘பேராசை’ என்று அர்த்தம். தேவைக்கு அதிகமாக ஒன்றின் மேல் ஆசைகொள்வதையே, ‘பேராசை’ என்கிறோம். அதே போல மற்றவர்களுக்கு சொந்தமானதை அடைய நினைப்பதும், பேராசையின் வரிசையிலேயே வரும். வேண்டியது கிடைத்துவிட்டால் அதை வைத்து திருப்தி அடைய வேண்டும். ஆனால் இன்னும் இன்னும் வேண்டும் என்பதாக நினைத்து பேராசை கொள்ளக்கூடாது. அதனால் பேராசையை தவிர்க்க வேண்டும்.

குரோதம்:- இதற்கு ‘கோபம்’, ‘சினம்’ என்று பொருள். நாம் ஆசைப்பட்ட ஒரு பொருளை அடைய வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம். அந்த ஆசை நிறைவேறாதபோது அது கோபமாக மாறுகிறது. கோப உணர்வானது நம்முடைய மனதிற்குள் புகுந்துவிட்டால், அது நாம் செய்யும் செயல்களில் சஞ்சலங்களை ஏற்படுத்தும். அதன் காரணமாக சொல்லும், செயலும் பாதிக்கப்படும். கோபத்தால் ஏற்படும் சொல்லும், செயலும் எப்போதும் சரியானதாக இருக்காது. எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

அகங்காரம்:- இதனை ‘இறுமாப்பு’, ‘செருக்கு’ என்றும் சொல்வார்கள். ஒருவரிடம் மற்றவர்களைக் காட்டிலும் கல்வி, அறிவு, பணம், அதிகாரம் போன்றவை அதிகமாக இருந்தால், அவரிடம் ஒரு கட்டத்தில் செருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதை தவிர்த்தால், அவரை விட இந்த உலகத்தில் உயர்வானவர் எவருமில்லை. அகங்காரம் என்பது மனதிற்குள் புகுந்துவிட்டால், அவனின் அடிப்படை நற்குணங்கள் அனைத்துமே மாயமாகிவிடும். எனவே செருக்கை அகற்ற வேண்டும்.

மதஸர்யம்:- இதனை ‘பொறாமை’ என்பார்கள். தன்னை விட வேறு எவரேனும் கல்வி, பதவி, அறிவு, செல்வம் போன்றவற்றில் உயர்ந்து விட கூடாது என்ற ஓர் எண்ணம் தான் பொறாமை ஆகின்றது. மற்றவர்களின் அறிவாற்றல், திறமைகள், செல்வம் போன்றவற்றைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் அவற்றை எப்படியாவது அழித்துவிட எண்ணம் கொள்வர். இத்தகைய ஓர் எண்ணம் உண்மையில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள விதைக்கப்பட்ட விதை என்பதை உணர வேண்டும். எனவே பொறாமையை நீக்கிவிடுங்கள்.

மேலும் செய்திகள்