திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்

திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்;

Update:2023-01-22 00:15 IST

தை அமாவாசையையொட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு புனித நீராடினர்.

தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த தலங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். மேலும் நாள் முழுவதும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்கி தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நேற்று தை அமாவாசையையொட்டி திருவாரூரில் உள்ள கமலாலய குளத்தில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் அங்குள்ள படித்துறைகளில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதனால் குளத்தின் கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் குளத்தில் திரளானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கல மாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தை அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

தை அமாவாசையையொட்டி நேற்று மன்னார்குடி அரித்ராநதி தெப்பக்குளக்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து மன்னார்குடி தெப்பக்குளக்கரையில் புனித நீராடி வழிபட்டனர். அப்போது வேதவிற்பன்னர்கள் அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்து ஆசீர்வதித்தனர்.

வடுவூர்

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் தை அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக வில் ஏந்திய திருக்கோலத்தில் புறப்பட்ட கோதண்டராமர் கோவிலின் நான்கு வீதிகள் வழியாக வந்து தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு தீர்த்தபேரர் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி ஒன்றியம் திருராமேஸ்வரம் கோவிலில் தை அமாவாசை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் அருகே உள்ள கோதண்ட தீர்த்தத்தில் நீராடினர். முன்னதாக கோவிலின் மூலவர் ராமநாதசாமி, மங்களாம்பிகை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை சிவன் கோவில் குளக்கரையில் தை அமாவாசையையொட்டி திரளானவர்கள் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் சிவனுக்கு ஆத்ம சாந்தி பூஜை செய்தனர். இதில் திரளானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்