இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி

இங்கிலாந்து பெண்கள் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.;

Update:2022-09-12 03:57 IST

image courtesy: BCCI Women twitter

செஸ்டர்-லீ-ஸ்டிரீட் ,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி செஸ்டர்-லீ- ஸ்டிரீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 29 ரன்களும், மந்தனா 23 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சாரா கிளென் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சோபியா டங்க்லி (61 ரன்), அலிஸ் கேப்சி (32 ரன்) களத்தில் இருந்தனர். அவுட் பீல்டு ஈரமாக இருந்ததால் இந்திய வீராங்கனைகள் பீல்டிங்கின் போது மிகவும் சிரமப்பட்டனர்.

தோல்விக்கு பிறகு இதை சுட்டிகாட்டி பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'கிரிக்கெட் விளையாடுவதற்கு உகந்த சீதோஷ்ண நிலை இங்கு இல்லை. ஆனாலும் விளையாடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டோம். இந்த நிலைமையிலும் எங்களது வீராங்கனைகள் வெளிப்படுத்திய முயற்சி மகிழ்ச்சி அளித்தது' என்றார். 2-வது 20 ஓவர் போட்டி டெர்பியில் நாளை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்