ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணி கடைசி பந்தில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்தது.

Update: 2017-02-17 20:57 GMT

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் வெற்றிக்கனியை பறித்தது.

20 ஓவர் கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.

நட்சத்திர வீரர்கள் பலரும் இந்தியாவுக்கு வந்து விட்டதால் ஆஸ்திரேலியா 2–ம் தரம் அணியாகவே களம் இறங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 43 ரன்களும் (34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அறிமுக வீரர் மைக்கேல் கிளைஞ்சர் 38 ரன்களும், டிராவிஸ் ஹெட் 31 ரன்களும் எடுத்தனர். ஒரு ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முன்னதாக ஆரோன் பிஞ்ச் 26 ரன்கள் எடுத்த போது 20 ஓவர் போட்டியில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த 2–வது வீரர் (முதலிடத்தில் கோலி) என்ற சிறப்பை பெற்றார்.

இலங்கை வெற்றி

அடுத்து 169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கைக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. கேப்டன் தரங்கா ரன்னின்றி வெளியேறினார். டிக்வெலா 30 ரன்களும், முனவீரா 44 ரன்களும், அசெலா குணரத்னே 52 ரன்களும் (37 பந்து, 7 பவுண்டரி), ஸ்ரீவர்த்தனா 15 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ டை வீசினார். இதில் 5 பந்துகளில் இலங்கை 5 ரன் எடுத்தது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது, கபுகேதரா பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. கபுகேதரா 10 ரன்னுடனும், பிரசன்னா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி கீலாங்கில் நாளை நடக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம்

ஆஸ்திரேலியாவுடன் 11–வது 20 ஓவர் போட்டியில் ஆடிய இலங்கை அணி அதில் பதிவு செய்த 7–வது வெற்றி இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசுடன் தலா 6 ஆட்டங்களில் வெற்றி கண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்