நடப்பு தொடரில் 3–வது சதம் அடித்து ஸ்டீவன் சுமித் அசத்தல்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் இந்த டெஸ்ட் தொடரில் வியப்பூட்டும் வகையில் பேட்டிங்கில் முத்திரை பதித்து வருகிறார்.

Update: 2017-03-25 23:45 GMT
 புனே (109 ரன்), ராஞ்சி (178 ரன்) டெஸ்டுகளில் சதம் விளாசிய 27 வயதான ஸ்டீவன் சுமித் அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டிலும் சதத்தை (111 ரன்) நொறுக்கினார். இதன் மூலம் சில சாதனைகளை நிகழ்த்தினார்.

*இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் (3) அடித்த வெளிநாட்டு கேப்டன் என்ற சாதனையை ஸ்டீவன் சுமித் சமன் செய்துள்ளார். இதற்கு முன்பு 2012–13–ம் ஆண்டு தொடரில் இங்கிலாந்து கேப்டனாக களம் இறங்கிய அலஸ்டயர் குக் மூன்று சதங்கள் அடித்திருந்தார்.

*இந்தியாவில் ஒரு டெஸட் தொடரில் மூன்று சதங்கள் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பையும் ஸ்டீவன் சுமித் பெற்றார். இதற்கு முன்பு நீல் ஹார்வி, நார்ம் ஓ நியல், மேத்யூ ஹைடன், டேமியன் மார்ட்டின் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய மண்ணில் ஒரு தொடரில் தலா 2 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

*இந்தியாவுக்கு எதிராக 10–வது டெஸ்டில் விளையாடும் ஸ்டீவன் சுமித் அதில் பதிவு செய்த 7–வது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங், வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் ஆகியோர் தலா 8 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்