தாயார் இறந்த துக்கத்திலும் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோசப்

தாயார் இறந்த துக்கத்திலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோசப் களம் இறங்கினார்.

Update: 2019-02-02 22:08 GMT
ஆன்டிகுவா,

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 187 ரன்னில் அடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 22 வயதான அல்ஜாரி ஜோசப்பின் தாயார் ஷரோன் மரணம் அடைந்த தகவல் தெரிய வந்தது. கண்ணீர் விட்டு அழுத அவருக்கு சக வீரர்கள் ஆறுதல் கூறினர். துக்கம் அனுசரிக்கும் வகையில் இரு நாட்டு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஜாசன் ஹோல்டர் 22 ரன்னிலும், அடுத்து வந்த கெமார் ரோச் 6 ரன்னிலும் வெளியேறினர். இதன் பின்னர் சோகத்தையும் பொருட்படுத்தாமல் அல்ஜாரி ஜோசப் களம் கண்டார். அவர் 7 ரன்னில் (20 பந்து) ஸ்லிப்பில் நின்ற ஜோ பர்ன்சிடம் கேட்ச் ஆனார். கடைசி விக்கெட்டாக டேரன் பிராவோ 50 ரன்களில் (216 பந்து) ஆட்டம் இழந்தார். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் 119 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை ஆடியது.

மேலும் செய்திகள்