20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்குமா? - மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்ய மேலும் ஒரு மாதம் காத்திருக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.

Update: 2020-06-11 00:30 GMT
துபாய், 

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சம் மற்றும் ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக இந்த உலக கோப்பை போட்டியை அங்கு நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் உலக கோப்பை குறித்து முடிவு செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாகிகள் கடந்த மாதம் 28-ந்தேதி ஆலோசித்தனர். ஆனால் அப்போது ஜூன் 10-ந்தேதி வரை காத்திருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஐ.சி.சி. நிர்வாகிகள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் மறுபடியும் விரிவாக விவாதித்தனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால் அவசரம் காட்டக்கூடாது என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து அடுத்த மாதம் வரை நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்து முடிவு மேற்கொள்வது என்று ஐ.சி.சி. தீர்மானித்து உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திபோடப்பட்டால் அந்த சமயத்தில் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது. அதனால் 20 ஓவர் உலக கோப்பை விஷயத்தில் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆனால் ஐ.சி.சி.யின் தற்போதைய முடிவு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வியூகத்துக்கு முட்டுக்கட்டை போடுவது போல் அமைந்துள்ளது.

2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த போட்டிகளுக்கு இந்திய அரசிடம் இருந்து வரிவிலக்கு பெற்றுத்தர வேண்டும் என்று ஐ.சி.சி. விதித்த காலக்கெடு ஏற்கனவே முடிந்து விட்டது. ஊரடங்கு அமலில் இருப்பதால் தங்களால் மத்திய அரசு அதிகாரிகளிடம் வரிவிலக்கு குறித்து பேச முடியவில்லை, இதனால் அதற்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட ஐ.சி.சி. வரிவிலக்கு பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஆண்டு இறுதிவரை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அவகாசம் அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்