இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி - லிவிங்ஸ்டன் சதம் வீண்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் சதம் வீணானது.

Update: 2021-07-18 01:35 GMT
நாட்டிங்காம்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக பறிகொடுத்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (63 ரன்கள், 41 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் (85 ரன்கள், 49 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் அரைசதம் நொறுக்கியதுடன் முதல் விக்கெட்டுக்கு 150 ரன்கள் (14.4 ஓவர்) திரட்டி வலுவான அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்த சோகைப் மசூத் (19 ரன்), பஹர் ஜமான் (26 ரன்), முகமது ஹபீஸ் (24 ரன்) அதிரடியாக ஆடி தங்கள் பங்களிப்பை அளித்தனர்.

20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் அந்த அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 48 ரன்னுக்குள் (4.3 ஓவர்) 3 விக்கெட்டுகளை இழந்து பரிவித்தது. இந்த நெருக்கடியான சூழலில் 5-வது வீரராக களம் புகுந்த லியாம் லிவிங்ஸ்டன், பாகிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து அணியை சரிவில் இருந்து மீட்டு நம்பிக்கை அளித்தார். 17 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர் 42 பந்துகளில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 103 ரன்கள் (43 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் (9) விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்ற லிவிஸ்டன் வெளியேறியதும் வெற்றி வாய்ப்பும் பட்டுப்போனது. அந்த அணி 19.2 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 31 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி லீட்சில் இன்று (இந்திய நேரப்படி இரவு 7 மணி) நடக்கிறது.

மேலும் செய்திகள்