ராஜஸ்தானுக்கு எதிரான தோல்வி; வீரர்களின் ஓய்வறைக்கு சென்று ஆறுதல் தெரிவித்த ஷாருக்கான் - வீடியோ

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது.

Update: 2024-04-17 07:43 GMT

Image Courtesy: Twitter 

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நரைன் சதமடித்து அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லரின் அதிரடி சதத்தின் உதவியுடன் கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

கடைசி பந்தில் அடைந்த தோல்வியின் காரணமாக கொல்கத்தா வீரர்கள் கவலை மட்டுமின்றி மிகுந்த அதிர்ச்சியும் அடைந்தனர். இந்த போட்டி கொல்கத்தாவின் சொந்த மைதானத்தில் நடைபெற்றதால், அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான் நேரில் வந்து ஆட்டத்தை கண்டு களித்தார்.

ராஜஸ்தான் அணி வெற்றிபெற்ற பின் மைதானத்திற்குள் வந்த ஷாரூக்கான், ராஜஸ்தான் மற்றும் கே.கே.ஆர் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் உரையாடினார். இதன்பின் கே.கே.ஆர் அணியின் ஓய்வறைக்கு சென்ற ஷாரூக்கான் வீரர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறியதாவது,

விளையாட்டில் சில நேரங்களில் நாம் வெற்றி பெற தகுதியில்லாதவர்களாக இருப்போம். வாழ்க்கையும் அப்படிதான். மாறிக் கொண்டே இருக்கும். இந்த போட்டியில் நாம் வெற்றிபெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் நமது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். நம்மை நினைத்து அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

இந்த தோல்விக்காக நாம் சோகமடைய தேவையில்லை. ஒவ்வொரு முறை ஓய்வறைக்கு வரும் போது, நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் வர வேண்டும். அதனை எப்போதும் பின்பற்றுங்கள். வீரர்கள் அனைவரும் களத்தில் நட்புடன் இருக்கிறீர்கள். அதனை தொடர வேண்டும். குறிப்பாக கவுதம் கம்பீர், சோகமாக இருக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்