'ரசிகர்கள், வீரர்களுக்காக பெங்களூரு அணியை...'; பி.சி.சி.ஐ.-க்கு டென்னிஸ் நட்சத்திரம் வேண்டுகோள்

பி.சி.சி.ஐ.-க்கு முன்னாள் டென்னிஸ் வீரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2024-04-16 12:18 GMT

பெங்களூரு,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது.

ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதன் மூலம் மும்பைக்கு எதிராக 277 ரன்கள் குவித்த தங்கள் முந்தையை சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது.

இதையடுத்து, 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூருவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்த பெங்களூரு 1 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் (10வது இடம்) உள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் பெங்களூரு தோல்வியடைந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதி பெங்களூரு தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகேஷ் பூபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விளையாட்டு, ஐ.பி.எல்., ரசிகர்கள், வீரர்களுக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை புதிய உரிமையாளருக்கு விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. முன்வரவேண்டும். மற்ற அணிகள் செய்வதுபோல் சிறந்த விளையாட்டு அணியை உருவாக்க நினைக்கும் உரிமையாளரிடம் பெங்களூரு அணியை விற்பனை செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் பதிவிடுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்