30- 70 சதவீதம் வெற்றி எங்கள் பக்கம் இருப்பதாக கருதுகிறேன் - சுப்மன் கில் பேட்டி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.

Update: 2024-02-04 15:57 GMT

image courtesy; twitter/@BCCI

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் தடுமாறி வருவதால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சதமடித்துள்ள அவர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இருப்பினும் நன்கு செட்டிலான அவர் சதமடித்ததும் மோசமான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை இழந்து ஏமாற்றத்துடன் சென்றார்.

இந்நிலையில் அதற்காக மைதானத்தில் இருந்து போட்டியை பார்த்த தன்னுடைய அப்பா திட்டுவார் என்று கூறும் கில் நாளை பிட்ச்சில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து 3-வது நாள் முடிவில் அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். முதலில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானபோது ஸ்ரேயாஸ் ஐயர் ரிவியூ எடுக்க சொன்னார். நான் கூடுதலாக 5 - 6 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும். பிட்ச் பேட்டிங் செய்வதற்கு ஓரளவு நன்றாக இருந்தது. இருப்பினும் பந்து எழும்பி வரும்போது அடிப்பது கடினமாக இருந்தது. அந்த ஷாட்டை அடித்ததற்காக அப்பா திட்டுவார் என்று நினைக்கிறேன்.

ஓட்டலுக்கு திரும்பியதும் அதைப் பற்றி தெரிந்து கொள்வேன். என்னுடைய பெரும்பாலான போட்டிகளை அவர் பார்க்க வருவார். இப்போதைக்கு 30 - 70 சதவீதம் வெற்றி எங்கள் பக்கம் இருப்பதாக கருதுகிறேன். நாளைய முதல் 1 மணி நேரம் முக்கியமானது. குறிப்பாக காலையில் பிட்ச்சில் உள்ள ஈரப்பதம் பவுலர்களுக்கு உதவியாக இருக்கும். அதை பயன்படுத்தி வெல்வோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்