டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷிவம் துபே தேர்வாகாமல் போனால் நான் ஏமாற்றமடைவேன் - இந்திய முன்னாள் வீரர்

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

Update: 2024-04-16 10:13 GMT

Image Courtesy: AFP 

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடர் மட்டுமின்றி கடந்த இரு சீசன்களாக சென்னை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், யுவராஜ் சிங் போல மிடில் ஓவர்களில் 16 - 17 பந்துகளில் அரை சதமடிக்கும் திறமையை கொண்டுள்ள துபே டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தற்போதைய இந்திய வீரர்களில் ஷிவம் துபேவின் அடிக்கும் திறமையை நான் மற்றவர்களிடம் பார்க்கவில்லை. குறிப்பாக மிடில் ஓவரில் விளையாடுவதற்கு துபே சிறந்தவர். எனவே அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தேர்வாகாமல் போனால் நான் ஏமாற்றமடைவேன்.

பல உலகக் கோப்பைகளில் யுவராஜ் சிங் போன்ற ஒருவரை நாம் தவற விட்டிருக்கிறோம். அவரால் 16 - 17 பந்துகளில் அரை சதமடிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியும். அவர் முதல் முதல் பந்திலிருந்தே அடிக்கக் கூடியவர். மறுபுறம் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியாக ஆடும் திறன் குறைந்து விட்டது

அதனாலயே துபேவை தேர்ந்தெடுக்கலாம் என பலரும் பேசத் துவங்கியுள்ளனர். அந்த இருவருமே உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் நான் துபேவுக்காக ஆர்வமாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்