வெளிநாட்டில் இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் - ரோகித் சர்மா விருப்பம்

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே வெளிநாட்டு சீதோஷ்ண நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் நடந்தால் நன்றாக இருக்கும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Update: 2024-04-18 23:55 GMT

கோப்புப்படம் AFP

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் யூடியூப் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு அணிகளும் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி. குறிப்பாக பந்து வீச்சு வலுவாக உள்ளது. அவர்களுடன் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் மோதினால் நிச்சயம் அது ஆகச்சிறந்த போட்டியாக இருக்கும். அற்புதமான ஒரு தொடராக அமையும். முழுக்க முழுக்க கிரிக்கெட் அடிப்படையில் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது' என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'இம்பேக்ட்' விதிப்படி ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராக சேர்க்க முடிகிறது. இந்த புதுமையான விதி குறித்து ரோகித் கூறுகையில், 'இம்பேக்ட் விதிமுறையால் ஆல்-ரவுண்டர்களின் திறமை மேம்படுவது தடுக்கப்படுவதாக நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாட்டே தவிர, 12 பேர் அல்ல. எனவே இம்பேக்ட் விதி என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக பொழுதுபோக்கை கொடுக்கலாம். ஆனால் கிரிக்கெட்டை வைத்து பாருங்கள். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டர்கள் இம்பேக்ட் விதியால் பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

மேலும், 2008-ம் ஆண்டு முதல் 2023-ம்ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் இரண்டு முறை மட்டுமே 250 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஐ.பி.எல்-ல் இப்போதே 4 தடவை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு விட்டன என்றால், இந்தி விதிமுறையின் தாக்கத்தை கவனியுங்கள். அது மட்டுமின்றி கூடுதலாக ஒரு முன்னணி பேட்ஸ்மேன் இறங்கும் போது, உங்களது வழக்கமான 6-வது அல்லது 7-வது வரிசை பேட்ஸ்மேன்கள் 7-8 பந்துகளை சந்திக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது' என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணித் தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் நான் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்