பேட்டிங்கில் 20-25 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும்: பாக். எதிரான தோல்வி குறித்து ஷனகா கருத்து
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.;
Image Courtesy: AFP
ஐதராபாத்,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் மெண்டிஸ் மற்றும் சதீரா சமரவிக்ரமா ஆகியோரின் சதத்தால் 344 ரன்கள் குவித்தது. இதையடுத்து 345 ரன்கள் நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் மற்றும் அப்துல்லா ஷாபீக் சதம் அடித்து அசத்தினர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேசுகையில்,
குசல் மெண்டிஸ் அற்புதமாக விளையாடினார். குறிப்பாக பயிற்சி ஆட்டத்தில் நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடிய அவர் முதல் ஆட்டத்தில் 70+ ரன்களும், இந்த ஆட்டத்தில் சதமும் அடித்து அசத்தினார். சமரவிக்கிரமாவும் சிறப்பாக விளையாடினார்.
இருப்பினும் பேட்டிங்குக்கு சாதகமான இந்த பிட்ச்சில் இன்னும் நாங்கள் 20 - 25 ரன்கள் அதிகமாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை எடுத்து விடாத அளவுக்கு ஸ்லோ பந்துகளை வீசிய பாகிஸ்தான் பவுலர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
இதற்கு மேல் எங்கள் பவுலர்களிடமும் எதையும் கேட்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு எளிதான திட்டங்களை மட்டுமே கொடுத்தோம். இருப்பினும் நாங்கள் எக்ஸ்ட்ரா ரன்களை அதிகம் கொடுத்திருக்கக்கூடாது. அதேபோல பீல்டிங்கில் நாங்கள் நிறைய தவற விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.