இதுவே என்னுடைய திட்டமாகும் - வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் சந்தீப் சர்மா பேட்டி

ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-04-23 01:09 GMT

Image Courtesy: X (Twitter) 

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணீ 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதம் மூலம் 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நேற்று முன் தினம் தான் பிட்டானேன். பிட்டான பின் விளையாடிய முதல் போட்டி நல்ல உணர்வை கொடுக்கிறது. பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது. எனவே தொடர்ந்து வேரியஷன்களை மாற்றி கட்டர்களை வீசுவோம் என்பதே என்னுடைய திட்டமாகும்.

கடைசிக்கட்ட ஓவர்களில் நீங்கள் பந்து வீசுகிறீர்கள் என்றால் உங்களுக்கு பெரிய மனம் வேண்டும். ஐ.பி.எல் தொடரில் பல வீரர்கள் அந்த நேரத்தில் அழுத்தத்தை சந்தித்ததை பார்த்துள்ளேன். எனவே அங்கே அசத்துவதற்கு நீங்கள் பெரிய மனதுடன் திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.

கடந்த சில வருடங்களுக்கு முன் நான் விலை போகவில்லை என்பது உங்களுக்கு தெரியும். இப்போதும் நான் மாற்று வீரராக வந்துள்ளேன். எனவே ஒவ்வொரு போட்டியையும் போனஸ் போல மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்