நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்ட்யா

ஐ.பி.எல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின

Update: 2024-04-23 03:47 GMT

Image Courtesy: X (Twitter) 

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல் தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதம் மூலம் 18.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய சந்தீப் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் மும்பை கேப்டன் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்.ஆனால் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை சேர்த்தார்கள். எனினும் நாங்கள் நல்ல முறையில் பேட்டிங்கை முடிக்கவில்லை குறைந்தது. 10 - 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம்.

இதே போன்று பந்துவீச்சிலும் ஸ்டம்ப்க்கு குறி வைத்து பந்து வீசி இருக்க வேண்டும். நாங்கள் பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்கள் அணியில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அது அவர்களுக்கு தெரியும்.

நாங்கள் செய்யும் தவறிலிருந்து திருத்திக் கொள்ள வேண்டும். திரும்ப செய்யக்கூடாது. எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கிறது. அது குறித்து அவர்கள் உழைக்க வேண்டும். எங்கள் அணியில் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என ரசிகர்கள் கேட்கிறார்கள்.ஆனால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

நான் ஒவ்வொரு வீரருக்கும் ஆதரவளிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது குறித்துதான் கவனம் செலுத்துகிறோம். எங்கள் அணியில் உள்ள திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்