பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து...!
32 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.
பிரிஸ்பேன்,
9-வது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகின்றன.
இதில் கலந்து கொண்ட 32 அணிகளில் இருந்து சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், நார்வே, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, கொலம்பியா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ், மொராக்கோ ஆகிய 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்களுக்கு முன்னேறின.
இந்த 16 அணிகளில் இருந்து இதுவரை ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான், சுவீடன் ஆகிய 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி நைஜீரியாவை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. வழக்கமான 90 நிமிட போட்டி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியாளரை தேர்வு செய்ய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த பெனால்டி ஷூட்-அவுட் முறையில் இங்கிலாந்து அணி 4 கோல்களும், நைஜீரியா அணி 2 கோல்களும் அடித்தன. இதன் மூலம் 0-0 (4-2) என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நைஜீரியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.